கிருஷ்ணலீலா ஆபாச தர்ப்பணம்

ஸ்ரீ கிருஷ்ண பரமாத்மா சிறுவயது முதல் தனது பக்தர், பக்தைகளுடன் பல லீலா வினோதங்களில் ஈடுபட்டுள்ளார். அவற்றுல்  கோபிகா வஸ்திராபரணம், ராஸலீலா நடனம் அனைவரும் அறிந்த ஒன்று. சாதாரண ஈன புத்திகாரர்கள் இதை ஆபாசமாகவே சித்தரிப்பர்.ஆனால் இதன் உண்மையான தெளிவை நாம் பெற்றறிருந்தாலே அத்தகைய ஈனர்களுக்கு பதில் கொடுக்கமுடியும்.

     இந்த லீலையை செய்யும்போது கிருஷ்ணருக்கு வயது ஏழு. அதை பாலபருவம் என்போம். அப்பருவத்தில்  பாலியல் எண்ணமோ தோன்றுவது அசாத்தியம். கிருஷ்ணர் குறும்புக்காரர் அவர் எதை செய்தாலும் அதில் குறும்புகளிருக்கும். அது லீலைகளாக இருந்தாலும் சரி, சம்ஹாரங்களாக இருந்தாலும் சரி. ஆகவே இதை மேலாட்டமாக பார்த்துவிட்டு அதை காமம்சாரந்ததாக பாவித்தால் அவர்களைவிட காமாந்தகர்கள் உலகில் இல்லை. இதை நாம் பாகவத புராணம் கொண்டு நோக்குவோம். ஸ்ரீமத் பாகவதம் 10 காண்டம்-அத்தியாயம் 29ல் இவை வருகின்றன.

கோபியர்கள் தன் அன்பினால் கண்ணனை  அடைய பாவை
நோன்பு நோற்றனர். துர்க்கை உருவத்தை வைத்து காத்யாயனி விரதம் நோற்றனர்.
"காத்யாயினி மஹாமாயே
மஹா யோகின்ய தீஸ்வரி
நந்தகோப ஸுதம் தேவி
பதிமே குரு தே நம'.

"யோகிகள் வழிபடும் உலக மாயையின் நாயகியான காத்யாயினி தேவியே! நந்தகோபனின் புதல்வனாகிய கோபாலனையே எனக்கு  அளிப்பாய்'என்று விரதம் அனுஷ்டிக்க எண்ணிய அவர்கள் தன் நகைகள், உடைகளை கரையில் வைத்து நீராடினர்.

அந்நேரத்தில் ஒரு குழலோசை. உடனே அது வெளிவர அவர்களின் ஆடைகளை காணவில்லை. உடனே கோபியர் வேணுகாணம் வந்த திசையை நோக்க மரத்தில் அமர்ந்துகொண்டு ஆடைகளை மரக்கிளைகளை தொங்கவிட்டுகொண்டிருந்தான். உடனே கோபியர்கள் தன் உடலை மறைத்துகொண்டு கண்ணா! உன்னை நம்பியவருக்கு இதுவா கதி? உன்னை தவிற வேறொன்றுமஎ தேவையில்லை என்று உன்னை சரணடைந்தவரை இப்படியா நடத்துவாய் என்று கேட்கலானர்.

உடனே கிருஷ்ணர் கூறுகிறார்"காத்யாயினி விரதம் அனுஷ்டிக்க எண்ணிய நீங்கள் ஆடை ஏதுமின்றி நிர்வாணமாக நீராடலாமா? இது வருண பகவானின் கோபத்திற்குள்ளாகும் செயல் என்று தெரியாதா என்று கேட்டான். கோபியர்கள் தவறை உணர்ந்து மெளனித்தனர். மேலும் கூறலானான் கண்ணன் "என்னை தவிற வேறு ஏதும் முக்கியமில்லை என்று கூறிய நீங்கள் ஆடையின்றி வெளியே வருவது எப்படி? " என்கிறீர்களே. எனில் உங்களுக்கு தேகாபிமானம் தானே முக்கியம். உலகப்பற்றையும் உடல்பற்றையும் விட்டவர்கள்தானே என்னை அடையமுடியும். என்னை தவிர்ந்த எந்த பற்றுகொண்டாலும் அது மோக்ஷ தடை என்றான் மாயக்கண்ணன்.

அவனது உபதேசத்தை கேட்ட கோபியர் தனஎ தவறை உணர்ந்து தேகாபிமானத்தை விட்டு கிருஷ்ண பிரேமையில் ஆழ்ந்து இரு கரங்களையும் தூக்கி அவனை துதிபாடலாயினர். கலங்கமற்றதும், அற்ப ஆசை அற்றதுமான கோபியர் பக்தியில் குளிர்ந்த கண்ணன் அவர்களுக்கு ஆடையை அளித்து மறைந்தான். இதுவே வஸ்திராபரண கதை.

கோபியர்களுக்கு பற்றற்ற நிலையை உணர்த்தவும், தன்னை சரணடைந்தாரை காக்கும் தன் இயல்பையும், தனது பக்தர்களுக்கு எந்நிலையிலும் இழுக்கு நேராவண்ணம் உதவவும் வாத்சல்ய குணத்தையும் உணர்த்தவே இந்த "கோபிகா வஸ்திராபரணம்" நடத்தினார்.
இதில் ஏதாவது காமாந்தகமோ, ஆபாசமோ உண்டா? இல்லை. மஹாபாரதத்தில் திரெளபதியின் துகிலை துச்சாதனன் உரித்தபோது தன் மானத்தை பற்றி கவலைகொள்ளாமல் எல்லாம் அவனே! என்று கைகளை உயர்த்தி வணங்கி ஹரி... ஹரி... அபயம் கிருஷ்ணா... அபயம்’ என்று துதிபாட பற்றற்ற பக்தியின்காரனமாக அவளை காப்பாற்றினார் ஸ்ரீ கிருஷ்ண பரமாத்மா.ஆக இது காமம் சார்ந்த விடயம் என்பது பேரபத்தம்.

அடுத்தது 'ராஸலீலா'நடனம். கண்ணன் பிருந்தாவனத்தில் வில்வ மரத்தின்மேல் அமர்ந்துகொண்டு குழலூதினான். அது இரவு நேரம். அந்தக் குழலோசை எங்கும் பரவியது. அதைக் கேட்ட கோபியர்கள் (மணமானவர்களும் மணமாகாதவர்களும்) தாங்கள் செய்துகொண்டிருந்த வேலையை அப்படியே விட்டுவிட்டு குழலோசை வந்த திசைநோக்கி நடந்தனர். சமைத்துக்கொண்டிருந்தவர்கள், சாப்பிட்டுக்கொண்டிருந்தவர்கள், பால்கொடுத்துக்கொண்டிருந்தவர்கள், கணவனுக்கு-  பெரியோருக்கு பணிவிடை செய்து கொண்டிருந்தவர்கள் என அத்தனை பேரின் ஆன்மாவும் அப்படியே விட்டுவிட்டு கண்ணனிடம் வந்துசேர்ந்தனர்.
காலன் வந்துவிட்டால் செயல்கள் யாவும் அற்றுப்போகின்றன. அந்த வினோத உன்னத நிலையே இந்த லீலை.

கண்ணன் சொன்னான்: ""இதென்ன பைத்தியக்காரத்தனம்! வீடு வாசல், கணவன், குழந்தைகள், பெரியவர்கள், செய்துகொண்டிருந்த காரியங்கள் அனைத்தையும் துறந்துவந்து நிற்கிறீர்களே! அதுவும் இந்த இரவு நேரத்தில்? இது தர்மத்துக்குப் புறம்பானதல்லவா? உடனே திரும்பிப் போங்கள்.''

அவர்கள் என்ன பதில் சொன்னார்களென்று நாராயண தீர்த்தர் தனது "கிருஷ்ணலீலா தரங்க'த்தில் பாடுகிறார்.

"மண்யேத்வாம் இஹ மாதவ தைவ
மாயாஸ்வீக்ருத மானுஷ பாவம்
தன்யை ராத்ருத தத்வ ஸ்வ பாவம்
தாதாரம் ஜகதாம் அதிவிபவம்.'

""கண்ணா, நாங்களறிவோம்- நீ சர்வலோக சரண்யனான பரமதெய்வம் என்பதை. அவதாரகாரணமாக இங்கு அவதரித்துள்ளாய். நாங்களோ ஜீவர்கள்; நீயோ பரமன். ஜீவன் பரமனுடன் இணைவதுதானே வாழ்வின் லட்சியம். எனவே எங்களை அலட்சியம் செய்யக்கூடாது'' என்றனர்.
இந்த இடத்தில் பாகவத சுலோகம் ஒன்றைக் காண்போமா?

"நகலு கோபிகா நந்தனோ பவான்
அகில தேஹினாம் அந்தராத்ம த்ருக்
விகன ஸர்த்விதோ விஸ்வகுப்த யே
ஸக உதேயிவான் ஸாத்வதாம் குலே.'

"நீ கோபாலனா? அல்லவே! அனைத்துயிர் களும் உன்னுள் அடக்கமல்லவா! எங்களைப் போன்ற சாதுக்களை கரையேற்றவே உதித்தவனாயிற்றே நீ!'

எதுவும் படிக்காத- வேத உபநிடதம் அறியாப் பேதைகளான கோபியர் எவ்வாறு உன்னதமான தத்துவத்தைப் பேசுகின்றனர் என்ற சந்தேகம் வரலாம். அப்படியானால் இந்த கோபியர் யார்?

"கோபிகைகள் கண்ணனிடமிருந்து உதித்தவர்கள்; அவர்கள் மூன்று வகையினர்' என்று ஸ்காந்த புராணம் கூறுகிறது.

சாதனசித்த கோபிகைகள்: தண்டகாரண்யம் போன்ற வனங்களிலிருந்த ரிஷிகள், முனிவர்கள், ஞானிகளாகிய ஞானவித்துகள் ஸ்ரீராமபிரானை அணைத்திட விரும்பினர். ராமர் கூறினார்- "அடுத்த அவதாரத்தில்' என்று!

நித்யசித்த கோபிகைகள்: அயோத்தி, மிதிலை போன்ற இடங்களில் ராமரின் அழகில் மனதைப் பறிகொடுத்து அவரை அணைக்க விரும்பிய ஆண்களுக்கும் பெண்களுக்கும் ராமர் சொன்னார்- "அடுத்த அவதாரத்தில்' என்று.

கோபிகா தேவிகள்: பரம சிரேஷ்டமான கோபிகைகள் ராதா, சக்த்ராவளி என்னும் இருவர். இதில் ராதையை கண்ணனின் ஹ்லாதினி சக்தி என்பர். அதாவது ஆட்கொண்ட சக்தி.
இவர்களே கண்ணனை சூழ்ந்து நிற்கின்றனர்.

அதன்பிறகு கண்ணன் கோபிகைகளுடன் "ராஸலீலை' எனும் நடனமாடினான். ஒவ்வொரு கோபிகைக்கும் ஒவ்வொரு கண்ணனாகத் தோன்றினான். அனைவரும் வட்டமாக ஆடிப்பாடினர். நடுவில் கண்ணன் ராதையுடன் பிரகாசித்து ஆடினான்.

எனவே இந்த ராஸலீலை, ராமர் கொடுத்த வாக்கை நிறைவேற்றவே நடந்தது. கோபிகைகளின் கவனம் பூத உடலில் இல்லை. அவர்கள் ஆத்ம சொரூபத்தில் இருந்தனர். கண்ணனின் பரமாத்ம சொரூபத்தில் இருந்தனர்.

எனவே இது ஜீவ- பரம லய, ரஸானுபூதி ஆனந்தலீலா நிலை! கோகுலத்திலிருந்து மதுரா சென்றபோது கண்ணனுக்கு ஏழுவயதுகூட ஆகவில்லை. மதுரா சென்ற கண்ணன் அதன்பின் கோகுல பிருந்தாவனம் வரவே இல்லை. எனவே மேற்சொன்ன ராஸலீலையில் காமத்திற்கு இடமே இல்லை!

ஸ்ரீமத் பாகவதத்தில், இந்த ராஸலீலை "ராஸ பஞ்சாத்யாயி' என்ற அத்யாயங்களில் கூறப்பட்டுள்ளது.

இதற்கான பலஸ்ருதி யாது?

"பக்திம் பராம் பகவதி ப்ரதிலப்ய காமம்
ஹ்ருத் ரோகம் ஆஸ்வ பஹினோதி அச்ரேணதீர.'

"இதைப் படிப்பதால் வெகுவிரைவாக பகவான்மீது மாதுர்ய பராபக்தி மிளிரும். காமப்பசியானது அறவே அழியும்' என்கிறது.

கண்ணன் கோபிகைகள் பற்றி உத்தவரிடம் கூறுகிறான்:

"தாமன் மனஸ்கா மத் ப்ராணா மத்
அர்த்தே த்யக்த தைஹி கா.'

""அவர்களுக்குத் தன் மனமில்லை; என் மனம்தான். சுதந்திரர்கள் அல்ல; அவர்கள் செயல்கள் யாவும் எனக்கே உரியதாகும்.''

என்னே கோபியர் மகிமை!

"கஹாம் ஸ்யாம் ஹை- வஹாம் காம் நஹி' என்றொரு இந்திப் பாடலுண்டு. "எங்கு ஸ்யாம் (கண்ணன்) உள்ளானோ அங்கு காமம் தலையெடுக்காது' என்று பொருள்.

இறுதியாக ஒரு செய்தி. இந்த ஸ்ரீமத் பாகவதத்தை, வியாசரின் புதல்வரான சுகப்பிரம்மரிஷி பரீட்சித்து மன்னனுக்குக் கூறினார். சுக முனிவர்  பிரம்மத்திலேயே லயித்திருப்பவர். பரீட்சித்து மன்னனோ இன்னும் ஏழு நாட்களில் மரணம் என்றறிந்து அதை எதிர்நோக்கியிருப்பவன். ராஸலீலை, வஸ்திராபரணம் காமம் சார்ந்ததென்றால் அதை சுகமுனி கூறியிருப்பாரா? சாகப்போகும் மன்னன்தான் கேட்டிருப்பானா?

எனவே ராஸலீலையும், வஸ்திராபரணமும் காமலீலை அல்ல; ஜீவ- பரம ஐக்கிய அனுபூதி நிலையென்ற தெளிவு வேண்டும். மற்றும் இந்த தெளிவை நமக்கு  புராண, இதிகாச கதையும் கூறுகிறது.

ஒருமுறை பிரம்மலோகத்தில், நாரதர் உரையாடிக் கொண்டிருந்தபோது, ஒரு கேள்வி எழுந்தது. மூவுலகிலும் நைஷ்டிக பிரம்மசாரி யார் என்பதே அந்தக் கேள்வி! "சந்தேகமென்ன, நீதான் நாரதா" என்று பிரம்மா சொல்வார் என, நாரதர் நினைத்தார். ஆனால், பிரம்மாவின் பதில் நாரதருக்கு அதிர்ச்சியைத் தந்தது. "பூவுலகில் மானிடனாக அவதரித்து, கோகுலத்திலும் பிருந்தாவனத்திலும் லீலைகள் பல புரிந்து கொண்டிருக்கும் ஸ்ரீகிருஷ்ணன்தான் நைஷ்டிக பிரம்மசாரி!" என்றார் ஸ்ரீபிரம்மா. "சதா சர்வ காலமும் கோபியருடன் ஆடிப்பாடி ராசலீலைகள் புரியும் ஸ்ரீகிருஷ்ணனா நைஷ்டிக பிரம்மசாரி?'" என்று நினைத்தபடி உரக்கச் சிரித்தார் நாரதர்.

துர்வாச மகரிஷி நாரதரை வரவேற்று, வந்த விஷயம் என்ன என்று கேட்டார். பிரம்ம லோகத்தில் நடந்த சர்ச்சையை விளக்கி, மூவுலகிலும் நைஷ்டிக பிரம்மசாரி யார் என்பதை தெரிவிக்க வேண்டுமெனக் கேட்டார் நாரதர். "சந்தேகமின்றி நைஷ்டிக பிரம்மசாரி அந்த ஸ்ரீகிருஷ்ணனேதான்" என்றார் துர்வாசர். அதற்கு விளக்கம் கேட்டார் நாரதர். "நாரதா, பெண்களே இல்லாத இடத்தில் இருந்து கொண்டு, அல்லது பெண்கள் தன்னை அணுகுவதைத் தவிர்த்துக் கொண்டு, வாழ்பவன் நைஷ்டிக பிரம்மசாரி அல்ல. பெண்கள் மத்தியிலே வாழ்ந்துகொண்டு அவர்களிடம் எந்தவித ஈடுபாடும் கொள்ளாமல் இருக்கிறவனே உண்மையில் வைராக்கிய பிரம்மசாரி. பதினாயிரம் கோபியருடன் ஆடிப்பாடி ராஸலீலை புரியும் ஸ்ரீகண்ணன், அவர்கள் ஒருவரிடமும் ஈடுபாடு கொள்ளாமல், பற்றற்ற நிலையில் பரப்பிரம்மமாகவே இருக்கிறான்.

அவன் அன்பும் அருளும் அனைவருக்குமே சொந்தம். பிருந்தாவனத்துப் பசுக்களும், கோபிகையரும் அவன் கண்களுக்கு ஒன்றுதான். அவன் அன்புக்கும் அருளுக்கும் ஆண் - பெண் என்ற பேதமில்லை. அவனை மற்றவர்கள் பிள்ளையாய், தந்தையாய், தாயாய், நண்பனாய், காதலனாய், குருவாய், தெய்வமாய் பாவிப்பது அவரவர்கள் மகிழ்ச்சிக்காகவே! அவன் தண்ணீரில் உள்ள தாமரை இலை. அது தண்ணீரில் இருந்தாலும், தண்ணீர் அதில் ஒட்டுவதில்லை. அதுபோலவே, அவன் பற்றற்ற பரம்பொருள். பதினாயிரம் பெண்கள் நடுவே நெருக்கமாக வாழ்ந்து, அவர்கள் பாசத்துக்கும் நேசத்துக்கும் ஆளான போதும், மனதாலும் வாக்காலும், காயத்தாலும் (உடல்) இச்சையின்றி வாழும் அவனே நைஷ்டிக பிரம்மசாரி" என்றார் துர்வாசர்

எனவே கிருஸ்ணரின் இவ்லீலைகள் காமம் சாராதது. கிருஷ்ணரை காமம் அணுகாது. கிருஷ்ண பக்தர்களையும் காமமணுகாது. கிருஷ்ண லீலை கூறும் ஸ்ரீ மத்பாகவதம் காமம் சார்ந்த நூலும் அல்ல. முழுக்க முழுக்க ஸாத்வீகமானது.
புராணங்களில் உயர்ந்ததும், பிரபல்யமானதுமே விஷ்ணு மற்றும் பாகவதபுராணமே.

ஆக அடிப்படை அறிவற்ற வேற்று மதத்தவரும், போலி நாத்தீகவாதிகளும் இக்கதையை கூறி கிருஷ்ணநிந்தனை செய்வது புதிதல்ல. ஆனால் சில குள்ள நரிகளே சனாதன தர்மத்தில் இருந்துகொண்டு ஆபாசமாக பேசுவது எத்தகைய இழிச்செயல். வைணவத்தின் வளர்ச்சியும், விஷ்ணுவின் உயர்தன்மை மேல் கொண்ட காழ்புணர்வுமே இவ்வாறு பேச வைத்துள்ளது இதே வேறுயாராவதாக இருந்தால் அவர்களுக்கு பதில்கொடுக்கும் விதமே வேறு. ஆனால் இதற்கு அவ்விதத்தில் பதிலளிக்கமுடியாதென்பதாலே பக்குவமான இப்பதிவு.

 'பாம்பு அணைப் பள்ளியானை
பழமொழி பகர்ந்த பாவி
கோம்பி ஆய் உதர அங்கி
கூர்ந்திடக் குலையும் அன்றே'              
       
பாம்பிலே பள்ளிகொள்ளும் நாராயணனை இழிவாகப் பேசியவன் ஓணானாய்ப் பிறந்து வயிற்றிலே தோன்றும் தீயால் உடல்குலைந்து நிற்பான்


  ||சர்வம் கிருஷ்ணார்ப்பணம்||



Comments

Popular posts from this blog

புராண பேத தாத்பர்ய விளக்கம்

திருக்குறளின் வழியாக பகவத் கீதையின் ஞானம்