வர்ணாஷ்ரமம்தர்மமா? அதர்மமா? -பகுதி-2

-------------------------------------------------------------------
வழங்கியவர்-கம்பவாரிதி இ.ஜெயராஜ்
-------------------------------------------------------------------

சாதி என்றாலே மகா அநியாயமான ஏற்பாடு என்று,
இப்போது அரசியல் கட்சிக்காரர்கள், படித்தவர்கள் என,
எல்லோரும் கரித்துக் கொட்டுவதற்கு யார் காரணம்?
ஒரு நல்ல அமைப்பு சீர்குலைந்து விடுவதற்கு யார் பொறுப்பாளி?
இந்தக் கேள்விகளுக்குப் பதில் சொல்கிறேன்.
வர்ணாச்சிரம தர்மத்தைப் பற்றி,
தப்பான அபிப்பிராயம் உண்டாகியிருப்பதற்கு பிராமணன்தான் காரணம்.
காலாகாலமாக உயிர் வளர்ச்சியும் தேச, உலக நலன்களும் காத்;து வந்த தர்மம்,
குலைந்து போனதற்கு பிராமணன்தான் பொறுப்பாளி.

ஆதிகாலத்திலிருந்து வர்ணாச்சிரம தர்மத்தைச் சரியாகக் கடைப்பிடித்துவந்த பிராமணன்,
பிற்காலத்தில் தன் கடமையாகிய வேதம் ஓதுதலையும் வேத கர்மங்களை அனுஷ்டிப்பதையும் விட்டுவிட்டு,
தாம் கூடி வாழ்ந்த ஊர்களை விட்டுப் பட்டணத்திற்கு வந்தான்.
வந்ததுமே தனக்குரிய ஆசாரங்களையும் அடையாளங்களையும் விட்டுவிட்டான்.
குடுமியை அறுத்து ‘கிராப்’ வைத்துக்கொண்டான்.
வேட்டியை விட்டு ‘புல் சூற்’ போட்டுக்கொண்டான்.
தனக்கு விதிக்கப்பட்ட ஆன்மீக வேதப்படிப்பை விட்டுவிட்டு,
வெள்ளைக்காரனின் லௌகீகப்படிப்பில் விழுந்தான்.
வெள்ளைக்காரனது நடையுடை பாவனை எல்லாவற்றையும் ‘காப்பி’ அடித்தான்.
தம் மூதாதையர்களாகிய வேதரிஷிகளிலிருந்து பாட்டன் அப்பன் வரை காத்துவந்த,
மகோன்னதமான தர்மத்தைக் காற்றில் பறக்கவிட்டான்.
வெறும் பணத்தாசைக்காவும் உடல்சுகத்துக்காகவும்,
மேல் நாட்டுப் படிப்பு, உத்தியோகம், வாழ்க்கைமுறை என்பவற்றில்,
விரும்பிப் போய் விழுந்துவிட்டான்.

இவனுக்கு பணத்தாசையே கூடாதென்றும்,
இவன் சொத்தே சேர்க்கக் கூடாது என்றும் சாத்திரங்கள் சொல்கின்றன.
அதன்படி அந்தணன் வாழ்க்கை நடத்தி வேத சத்தங்களாலும் வேள்விகளாலும்,
உலக நலத்தை ஏற்படுத்திக் கொண்டிருந்தவரையில்,
மற்ற எல்லாச் சாதிக்காரரும் அவனிடம் குறைவில்லாத அன்பும் மரியாதையும் காட்டி வந்தனர்.
இவனையே முன்மாதிரியாக வைத்துக் கொண்டனர்.
அந்தணன் வெள்ளைக்காரர்களைப் பார்த்து தன்னை மாற்றிக்கொள்ள,
இதுவரை நல்லதற்கெல்லாம் அவனை முன்னுதாரணமாக வைத்துக் கொண்டிருந்தவர்கள்,
ஒழுங்கு தப்பி வாழ்வதிலும் அவனையே பின்பற்ற ஆரம்பித்தார்கள்.

பல்லாயிரம் ஆண்டுகளாய் புத்திக்குரிய விஷயங்களைச் செய்துவந்த அந்தணன்,
தன்னலனுக்குப் பயன்படுத்தாமல் சமூகநலனுக்காகவே அப்புத்தியை அர்ப்பணித்து வந்தான்.
இந்த தியாகச்சிறப்பாலே அவனது புத்தி தீட்டிய கத்திபோல கூர்மையாக இருந்தது.
இப்போது அவனுக்கு உலக நலன் எனும் நோக்கம் போய் தன்னலமான உலகியல் ஆசைகள் வந்தபின்,
அந்த புத்திப்பிரகாசம் மழுங்கிப் போயிற்று.
ஆனாலும் சைக்கிள் ஓடிக்கொண்டிருந்தவன் ‘பெடல்’ பண்ணுவதை நிறுத்திய பிற்பாடும் கூட,
ஏற்கனவே உந்திய வேகத்தால் அந்த சைக்கிள் கொஞ்சத்தூரம் ஓடுவதுபோல,
பிராமணன் ஆன்மீக வித்தையைவிட்டு லௌகிகவித்தையில் போய் விழுந்த பிறகும்,
ஏற்கனவே தலைமுறை தலைமுறைகளாக அவனுடைய மூதாதையர்கள் பண்ணியிருந்த தவப்பலனால்;,
அவர்கள் சேமித்து வைத்திருந்த அறிவாற்றல் இன்னமும் அவனுக்குக் கொஞ்சம் மிஞ்சியிருந்தது.
அதனால் வெள்ளைக்காரனின் படிப்பு முறையிலும் அவன் ஆச்சரியமாகத் தேர்ச்சி பெற்றான்.
அவர்கள் துறையில் அவர்களுக்கே தெரியாத நுட்பங்களை,
அவர்களுக்குக் கற்றுக் கொடுக்குமளவிற்குக் கெட்டிக்காரனானான்.

வெள்ளைக்காரன் கொண்டு வந்த விஞ்ஞானக் கருவிகளும்,
அதனால் எளிமையாய்ச் செய்யப்படும் காரியங்களும் உடற் சுகத்தை அதிகரித்துத்தந்தன.
இந்திரியங்களுக்குச் சுகத்தைக் காட்டிவிட்டாற்போதும்,
அது  மேலே மேலே கொழுந்துவிட்டு எரிந்து,
ஆசைகளை அதிகரித்துக்கொண்டேபோகும்.
இப்படியாக ஆன்மாவைக் கெடுத்து உடற்சுகம் தருகின்ற சாதனங்கள்,
வெள்ளைக்காரர்களால் கொண்டு வரப்பட,
முன்பின் கண்டிராத இந்த சுகங்களில் பிராமணனுக்கு ஆசை உண்டாகியது.
அவன் தன் உயரம் விட்டு மற்றவர்களின் நிலைக்கு இறங்கினான்.

வெள்ளைக்காரர்களோடு இங்கு மற்றொரு தவறும் வந்து சேர்ந்தது.
பகுத்தறிவு பகுத்தறிவு என்று ஓர் விடயத்தைக் கிளப்பிய அவன்.
அனுபவத்தினால் வந்த நம்பிக்கைகளை அடிப்படையாகக் கொண்டு எழுந்ததான,
சமய விஷயங்களை, பகுத்தறிவினால் ஆராய்வதாய்ச் சொல்லி,
அவற்றைப் பொய், புரளி என நினைக்க வைத்தான்.
அதுவரை தன் சுயதர்மத்தை விடாத பிராமணன்,
வெள்ளைக்காரனின் புரட்டை நம்பி அதனைக் கைவிட்டான்.
வெள்ளைக்காரனைப் போலவே ‘டிப்டொப்பாக டிறஸ்’செய்துகொண்டு,
சிகரட் குடிக்கவும் ‘டான்ஸ்’ ஆடவும் பழகிக்கொண்டான்.
தங்களைப் போலவே மாறி தங்கள் வழியில் வரத் தலைப்பட்ட,
இயல்பான ஆற்றலோடு இருந்த பிராமணனுக்கு,
வெள்ளைக்காரர்கள் நிறைய உத்தியோகங்களைக் கொடுத்தார்கள்.

இப்போதுதான் பெரிய தீங்கு உண்டாயிற்று.
அதுவரை காலமும் தத்தமக்கென ஒரு தொழிலை நிர்ணயித்து,
வாழ்வின் தேவைகள் பற்றிக் கவலையில்லாமல் இருந்து வந்த மற்றையவரும்,
பிராமணனைப் பார்த்து பரம்பரை பரம்பரையாகச் செய்த தொழிலை விட்டுவிட்டு வெள்ளைக்காரர்கள் காட்டிய பிறதொழில்களில் போய் விழுந்தனர்.
இதனால் தத்தமக்கு என்றிருந்த தொழில்முறைகள் போய்,
எல்லோரும் ஒரே வகையான தொழிலுக்காய்p போட்டி போடத் தொடங்கினர்.
அதனால், “தொழிலுக்கான போட்டி” என்ற விபரீதம் தொடங்கிற்று.
போட்டி என்று வந்ததும் பொறாமை, பகை என்பவை அதைத் தொடர்ந்தன.
ஒற்றுமையாய் இருந்த சமூக அமைப்பு சீர்குலைந்தது.

தம் மூதாதையர்களின் தவபலத்தால் புத்திக் கூர்மை பெற்றிருந்த பிராமணன்,
அதனால் வந்த படிப்பு, உத்தியோகம் இவற்றிலே மற்றவர்களை விட முன்னின்றான்.
அதனால் மற்றவர்களுக்கு பிராமணன்மேல் பகை அதிகரித்தது.
இவர்களுக்குள் ஏற்பட்ட பிரிவை இனங்கண்டு கொண்ட வெள்ளைக்காரன்,
ஆரியன், திராவிடன் என்ற கதைகளையும் கட்டி,
ஒரு தாய் வயிற்றுக்குழந்தைகளாக இருந்தவர்களிடத்தில்,
பிரிவின் விதைகளை நன்றாகப் போட்டுவிட்டான்.

இந்தப்பகை இரட்டிப்பாகிற வகையில் பிராமணன் இன்னொன்றையும் செய்தான்.
ஒருபுறத்தில் ஜாதி தர்மங்களை விட்டுவிட்டு தான் வெள்ளைக்காரனுடன் சேர்ந்து,
அவனைத் திருப்திப்படுத்துவதற்காய்,
நம் மூதாதையரின் பழைய சமூக ஏற்பாடுகள் காட்டு மிராண்டித்தனமானவை என்றும்,
ஒருத்தரை ஒருத்தர் சுரண்டுவது எப்படி சமதர்மம் ஆகுமென்றும் பேசிக்கொண்டு,
மறுபுறம் மற்றவர்களோடு ஒட்டிப் போகாமல்,
தான் ஏதோ உயர்ந்தவன் என்று பெருமை கொண்டாடிக் கொண்டான்.


முன்பும் இவன் மற்றவர்களோடு ஒட்டிப்பழகவில்லைதான்.
ஆனால் அப்போது அதற்கான நியாயம் இருந்தது.
அவனது வாழ்க்கை முறையை முன்னிட்டு,
ஆகாரம் முதலிய சில விஷயங்களில் வித்தியாசமாக அவன் இருக்கவேண்டியிருந்தது.
அந்த வித்தியாசம் வாழ்க்கை முறையால் வந்தது.
சினிமா ‘சூட்டிங்’ செய்கிற இடத்தில் நிறைய வெளிச்சம் வேண்டும்.
‘பிலிம்மை’ கழுவுகிற இடம் இருட்டாகத்தான் இருக்கவேண்டும்.
ஒரு சாப்பாட்டுக்கடையில் உணவு சமைப்பவன் சுத்தமாக இருக்கவேண்டும்.
பாத்திரம் கழுவுகிறவன் அழுக்காய்த்தான் இருப்பான்.
இதே போலத்தான் அற ஒழுக்கத்தை கடைப்பிடிக்கும் அந்தணன்,
சாத்வீக உணவைத்தான் உண்ணவேண்டும்.
படையில் இருக்கிறவன் மாமிசங்களையும் உண்ணத்தான் செய்வான்.
அறம் வளர்ப்பவனும் பிறதொழில்கள் செய்பவர்களும் ஒன்றாக முடியாது.
தன் ஆசாரத்திற்காக சிலவிஷயங்களில் அந்தணன் தனித்தே நிற்கவேண்டியிருந்தது.
எல்லோருடனும் சேர்ந்து உண்டால்.
மற்றவர்களின் உணவில் சபலம் உண்டாகிவிடும் என்பதற்காக,
உணவைத் தனியே இருந்து அவன் உண்டான்.
செய்யும் தொழில்களுக்கேற்ப சில விடயங்களில் சமூகப்பிரிவினர் தனித்தனியாய் நின்றனர்.
ஆனாலும் அவர்களுக்குள் உள்;ர ஒரு ஒற்றுமை இருக்கவே செய்தது.

ஒருவர் வாழ்க்கையை ஒருவர் குழப்பக்கூடாது என்பதற்காக,
தனித்தனியாய் வேறு வேறு இடங்களில் அவர்கள் குழுக்களாய் வாழ்ந்தும் வந்தனர்.
அக்கிரகாரம், சேரி என்பவை இப்படித்தான் அமைந்தன.
புதிதாக உண்டான பட்டண வாழ்க்கையில்,
இவ்வாழ்க்கை முறையைச் சரியாய்க் கடைப்பிடிக்க முடியவில்லை.
வெள்ளைக்காரனைத் திருப்திப்படுத்துவதற்காக,
உள்ளே வேற்றுமை வைத்துக்கொண்டு வெளியே அனைவரும் கலக்க ஆரம்பித்தனர்.
பிராமணனும் மற்றவர்கள் போல வாழ ஆரம்பித்தான்.
 
உலக நன்மைக்காக தர்மத்தைக் காத்து அதன் பயனை எல்லோர்க்கும் தந்த பிராமணனை,
ஒருகாலத்தில் எல்லோரும் மதித்துப் போற்றினார்கள்.
இப்போது அவர்களோடு தாமும் சமமென்று வாழத்தொடங்கிவிட்டதால்,
அவனது மதிப்புக் குறைந்து போனது.
மற்றவர்களைவிட மோசமாக கட்டுப்பாடில்லாமல் வாழ்ந்து கொண்டு,
மற்றவர்களைவிட தான் உயர்ந்தவன் என உள்;ர நினைத்துக் கொண்டிருந்ததால்,
அவன் மேல் மற்றவர்களுக்குப் பகை அதிகரித்தது.
பிராமணன், தானும் தன் தர்மத்தைக் கைவிட்டு,
மற்றவர்களும் அவரவர் தர்மத்தைக் கைவிடுமாறு செய்துவிட்டான்.
இவனுக்கு உயர்வு என்று எதுவுமே இல்லாமல் போயிற்று.

அக்காலத்தில் பிராமணன் கடும் விரத நியதிகளோடு,
தூய்மையாக வாழ்ந்ததைப் பார்த்து மற்றவர்கள்,
தாமாக இவனுக்கு ஒரு ஏற்றம் கொடுத்தார்கள்.
இப்போது அதற்கெல்லாம் வட்டியும் முதலுமாகச் சேர்த்து,
தன்னை மற்றவர்கள் தூற்றும்படி இவனே ஆக்கிக் கொண்டுவிட்டான்.
இந்துசமூகம் பாழாய்ப்போனதற்கு பிராமணன்தான் காரணம் என்பது,
எனது முடிவான அபிப்பிராயம்!



தர்மத்தைக் காக்க வாழ்ந்த காலத்தில்,
வேதம் ஓதுவது, வேள்வி செய்வது என,
தன் நேரம் முழுவதையும் அதற்கே பிராமணன் செலவழிக்கவேண்டியிருந்தது.
அங்ஙனமாய் தன் முழுநேரத்தையும் அவன் செலவழித்தால்,
தன் வாழ்க்கைத் தேவைக்கு அவன் என்ன செய்வது?
அவன் பொருள் தேடப் புறப்பட்டாலோ,
அவனது ஆசார அனுஷ்டானங்கள் கெடும் அறம் சிதையும்.
அதனால் ஒட்டுமொத்த சமுதாயமும் நஷ்டப்படும்.
அதனால்த்தான் அவனுக்காகச் சமூகம் தானங்களைச் செய்தது.
அவற்றைப் பெறுவதில் கூட சில கட்டுப்பாடுகளை அந்தணர்கள் வைத்திருந்தார்கள்.
தானங்களை வரம்பில்லாமல் வாங்கிக் கொள்ளக்கூடாது என்பது அந்தணனுக்கான கட்டுப்பாடாக இருந்தது வருமானம் அதிகரித்தால் அது உடல் சுகம் நோக்கி தம்மை இழுத்துவிடும்.
ஆத்மவளர்ச்சியைக் கெடுக்கும் அதுமட்;டுமில்லாமல்,
மற்றவர்களிடம் கைநீட்டிவிட்டால் தருகிறவனுக்காக வளைந்து கொடுக்கவேண்டி வரும்.
நடுநிலைமை தவறவேண்டிவரும்.
இவற்றையெல்லாம் நினைத்தே தர்மசாஸ்திரங்கள்,
பிராமணர்கள் உயிர்வாழ்வதற்கு அதிகபச்சமாக எது தேவையோ,
அதற்கு மேல் ஒரு எள்ளளவு பொருளையும் வைத்திருக்கக்கூடாது என்று விதித்தன.

 

பிற்காலத்தில் அந்தணர்களுக்குத் தானம் வழங்கும்முறை நின்று போனதால்த்தான்,
தாங்களும் மற்றவர்கள் போல உத்தியோகம் என்று இறங்கும்படியாயிற்று என,
தம் பிழைக்கு சில பிராமணர்கள் சமாதானம் கூறி வருகிறார்கள்.
அது சரியல்ல!
இடையிடையே வேற்று ஆட்சிகள் அமைந்தபோதெல்லாம் கூட தானங்கள் இல்லாமல்தானே போனது.
ஆனாலும் அப்போதைய பிராமணர்கள் வைதீக தர்மத்தை விடாமல்தானே இருந்தார்கள்.
இடையில் வந்த மாற்றுச் சமயத்தவர்கள் கூட,
தர்மமும் பிராமணரும் அழிந்து போகக் கூடாது என்று எண்ணி,
அவர்களுக்குத் தானங்கள் கொடுத்துக் காத்து வந்திருக்கிறார்கள்.
வெள்ளைக்கார ஆட்சி வந்தபிறகும்,
அவன் காட்டிய சுகபோகத்தில் மயங்காமல்,
சாத்திரம் விதித்த அளவிற்கு அத்தியாவசிய தேவைகளை மட்டும் நிறைவேற்றி,
பிராமணன் வாழத் தலைப்பட்டிருந்தால்,
மற்றவர்கள் அவனுக்கான வசதிகளைச் செய்து தந்திருப்பார்கள்.
அவர்கள் பிராமணனைக் கைவிடவில்லை.
பிராமணனாகத்தான் வேதத்தையும், அக்கிரகாரத்தையும் விட்டு ஓடிப்போய்விட்டான்.
எனவே சூழ்நிலைக்காகத்தான் மாறினோம் என்று,
சில அந்தணர்கள் சொல்லும் சமாதானத்தை ஏற்க முடியாது.



பிராமணன் பட்டணத்திற்கு வந்து,
தன் அடிப்படைத் தேவைகளைப் பெற்று வாழ்ந்திருந்தால் கூட பரவாயில்லை.
ஆசை கூடக்கூட ஊர் மாறி இடம் மாறி,
இன்று கண்டம் மாறி வாழவும் ஆரம்பித்துவிட்டான்.
அங்கு சென்றதும் கொஞ்சநஞ்சமாய் மிச்சமிருந்த ஆசாரங்களையும் உதறித்தள்ளிவிட்டு,
இராணுவத்தில் அதிகம் சம்பளம் வருகிறதா? அங்கும் வருகிறேன் என்று,
மது, மாமிசம் என அனைத்தையும் பழகி தன்னை மாற்றிக் கொண்டான்.
இன்று பிராமணன் பணத்திற்காக எதையும் செய்கிறான் என்பதைத்தானே பார்த்துக்கொண்டிருக்கிறோம்.



என்தேசம், என்பாசை என்று சொல்கிற பலபேர்,
இன்று அவற்றைக்காக்கத் தம் உயிரையும் அச்சமின்றி விடுகிறார்கள்.
அவற்றிற்குப் பிரச்சினை வருகின்ற பொழுது தமக்குத்தாமே தீமூட்டிக் கொள்கிறார்கள்.
தனது தர்மம் என்றிருந்த பிராமணனும் தன் அறவாழ்விற்கு இடைஞ்சல் வந்தபோது,
தன் உயிரை மாய்த்துக்கொண்டிருக்கலாமல்லவா?
தர்மத்தை விட்டு வாழ்வதைவிட,
தர்மத்தைக்காக்க சாவதே மேலல்லவா?
பிராமணனது உடல்,
வேதத்தை இரட்சிப்பதற்கான நியம அனுஷ்டானங்களை செய்வதற்காய் ஏற்பட்டது.
அவ் உடலில் அதிகப்படியான எந்த போக விஷயங்களிலும் சேர்க்கக்கூடாது என்பதுதான்,
அடிப்படை தர்மம்.
இன்றைய பாதகமான சூழ்நிலையில்,
முன்னைவிட கடுமையாய் தர்மத்தை இரட்சிப்பதுதான் அவர்களுக்குப் பெருமை.
அவர்கள் அப்படிச் செய்யாமல் விட்டது பெரிய பிழை!
சுகம்;தேடிப் போன வாழ்விலும் இன்று அவனுக்கு போட்டியும், பிரச்சினைகளும் அதிகம் வந்துவிட்டன.
இனி அவர்கள் என்ன செய்யப்போகிறார்கள்?
பழையபடி தமது தர்மத்தைக் கடைப்பிடிக்க அவர்களால் திரும்பமுடியுமா?
எனவே மேற்சொன்ன விடயங்களை வைத்துத்தான் சொல்கிறேன்.
இன்றைய பிராமணர்களுடைய ஒழுக்கயீனத்தால்தான்,
வர்ணாச்சிரம தர்மம் சிதைந்தது.

                                              தொடரும்....... 

Comments

Popular posts from this blog

புராண பேத தாத்பர்ய விளக்கம்

கிருஷ்ணலீலா ஆபாச தர்ப்பணம்

திருக்குறளின் வழியாக பகவத் கீதையின் ஞானம்