ஹிந்து-हिंद


        

          பொதுவாக நம்மிடையே ஹிந்து எனும் சொல் அந்நியர் வைத்த பெயர். அது மதத்தை குறிக்காது சிந்துவெளியில் வாழ்ந்த மக்களைமட்டுமே குறிக்கும் எனும் கருத்துக்கள் நிலவுகிறது. ஆனால் இது உண்மையல்ல. 

         வராலாற்று ரீதியாக சிந்து நதிக்கு அப்பால் இருந்த பிரதேசத்தையும் அங்கு வாழும் மக்களையும், அவர்களது ஒட்டுமொத்த வாழ்க்கை முறையையும் குறிக்க, அந்த பூகோளப் பிரதேசத்திற்கு வெளியே இருந்த பண்டைய சுமேரியர், பாரசீகர், கிரேக்கர் ஆகிய மக்களால் தான் ஹிந்து என்ற பதம் முதன்முதலில் பயன்படுத்தப்பட்டது. ஆனால் இது அவர்கள் உருவாக்கிய பதமல்ல. 

     ரிக்வேத ரிஷிகள் தாங்கள் வாழ்ந்த பிரதேசத்தை ஸப்த ஸிந்து என்றே அழைத்தனர். அந்தச் சொல்லே ஹப்த ஹிந்து என்று பாரசீக மொழியில் உருமாற்றம் அடைந்தது.  சரஸ்வதி = ஹரஹ்வதி, அஸுர் = அஹுர் என்று பல சம்ஸ்கிருதச் சொற்கள் இதே ரீதியில் பண்டைய பாரசீக மொழியில் உருமாற்றம் பெற்றுள்ளன. இந்த சொல் உருமாற்றத்திற்கான அகச்சான்றுகள் நமது புராணங்களிலும், ஆகமங்களிலும் உள்ளன.

     சம்ஸ்கிருத பாஷை அன்னிய பிரதேசங்களில் அங்கு வாழ்வோரையும் இன்புறச் செய்யுமாறு ”யாவனீ”யாக, மிலேச்ச வாணி”யாக மாறுவது பற்றி பவிஷ்ய புராணம் இப்படிக் குறிப்பிடுகிறது

சம்ஸ்க்ருதஸ்யைவ வாணீ  து பாரதம் வர்ஷமுஹ்யதாம் |
அன்யே கண்டே கதா ஸைவ ம்லேச்சா ஹ்யானந்தினோபவன்  ||
ஜாதுஸ்தானே ஜைனசப்த: ஸப்தஸிந்துஸ் ததைவ ச |
ஹப்தஹிந்துர் யாவனீ ச புனர்க்ஞேயா குருண்டிகா ||

(பவிஷ்ய புராணம், பிரதிஸர்கபர்வம், 5ம் அத்தியாயம்)

ஹிமாலயன் ஸமாரப்ய யாவ்திந்துஸரோவரம் |
தன் தேவ்னிர்மிதன் தேஷன் ஹிந்துஸ்தானன் ப்ரசக்ஷ்யதே ||

பொருள்: கடவுள் படைத்த நிலப்பரப்பான இமயமலை முதல் தென் பெருங்கடல் வரை இந்துசுதான் என்று அழைக்கப்படுகிறது. இதில் இந்து என்கிற சொல் இந்துசுதானில் உள்ளது. 

(பிரஹஸ்பதி ஆகமம்)

        சம்ஸ்கிருத நூல்களில் தொடங்கிய ஹிந்து என்ற சொல்லின் பயன்பாடு 9-10ம் நூற்றாண்டுகளில் வட இந்திய பிரதேச மொழிகளின் இலக்கியத்தில் அழுத்தமாக இடம் பெற்று விட்டது. பிருத்விராஜனின் பெருமைகளை விவரித்து அவரது அரசவைக் கவிஞரான சந்த பரதாயி எழுதிய பிருத்விராஜ் ராஸோ (11ம் நூற்றாண்டு) என்ற ஹிந்தி வீரகதைப் பாடலில் ஹிந்து என்ற சொல் ஏராளமான இடங்களில் வருகிறது.  ”ஹிந்துக்கள் மிலேச்சர் மீது நடத்திய போர்”, “ஹிந்துக்களாகிய நாங்கள் மிலேச்சர்களைப் போல மானமற்றவர்களல்ல” போன்ற வரிகள் இந்த நூலில் விரவியுள்ளன. 

    13ம் நூற்றாண்டில் வாழ்ந்த கபீர்தாசர், குருநானக், தாதூ தயால், நாபா தாசர் ஆகிய பக்தி இயக்கக் கவிஞர்களின் பாடல்களில் ஹிந்து, துரக் ஆகிய சொற்கள் முறையே இந்துக்களையும், இஸ்லாமியர்களையும் வேறுபடுத்திக் காட்டும் வகையில் பயின்று வந்துள்ளன. பாரதத்தின் கிழக்குப் பகுதியான வங்கத்தைச் சேர்ந்த தர்க்க சாஸ்திர நூல் ஒன்றில் “சிவ சிவா, அவன் ஹிந்துவும் அல்ல யவனனும் அல்ல” (சிவ சிவ ந ஹிந்துர் ந யவன:) என்ற சொற்றொடர் காணப் படுகிறது.

           தென்னிந்தியாவை இஸ்லாமியப் படையெடுப்பிலிருந்து காப்பதற்காக 14ம் நூற்றாண்டில் எழுந்தது விஜய நகர சாம்ராஜ்யம். இதனைத் தோற்றுவித்த ஹரிஹர, புக்க சகோதரர்களின் அரசு முத்திரையில் “ஹிந்து ராய ஸுரத்ராண” என்ற பட்டப் பெயர் இடம் பெற்றுள்ளது. ராஜபுத்திர மன்னர்களின் ஆவணங்கள் அனைத்திலும் ஹிந்து என்ற பெயர் பெருமிதத்துடன் கூறப்படுகிறது. மகாராஷ்டிரத்தில் தோன்றிய சமர்த்த ராமதாசர் என்ற மகானின் பாடல்களில் “ஹிந்துஸ்தான் பளாவலேம்” போன்ற வரிகள் உள்ளன. 

       இவரது ஆசியுடன் சத்ரபதி சிவாஜி அமைத்த சுதந்திர இந்து ராஜ்ஜியம் ”ஹிந்து பதபாதசாஹி” என்றே தன்னை அழைத்துக் கொண்டது. ”ஹிந்துவின் குரலையும், ஹிந்துவின் குடுமியையும், ஹிந்துவின் திலகத்தையும், வேத புராணங்களையும் காத்தவன்” என்று சிவாஜியைக் குறித்து கவிஞர் கவிராஜ பூஷண் புகழ்ந்து பாடியுள்ளார். வடக்கில் ஆப்கானிஸ்தானம் முதல் தெற்கே தஞ்சை வரை பரந்து விரிந்திருந்தது இந்த மராட்டிய ஹிந்து அரசு. 

         தமிழில் தஞ்சை மராட்டியரின் ஆவணங்களிலேயே முதன் முதலில் ஹிந்து என்ற சொல் காணப் படுகிறது.
சீக்கிய குருமார்களின் பல பாடல்களில் தங்களது அற நெறியை ஹிந்து தர்மம் என்று குறிப்பிடுகின்றனர். குரு தேக்பகதூர் அவர்களை இஸ்லாமிய மத அதிகார வர்க்கம் அச்சுறுத்திய போது, அவர் “என்னுடையது ஹிந்து தர்மம்; உயிரினும் மேலாக இதை நேசிக்கிறேன்” (uttar bhanyo dharam ham hindu, ati priyako kima kare nikandu) என்று பதிலிறுத்தார். 

          சீக்கிய மதத்தை வீரர்களின் திருக்கூட்டமாக மாற்றியமைத்து அதற்கு காலசா என்று பெயரிட்ட குரு கோவிந்த சிங் (1666 – 1708) அந்தப் பிரகடனத்தையே ஹிந்து என்ற சொல்லால் அலங்கரிக்கிறார் –
sakal jagat mein khAlsA panth gAje
jAge dharam hindu sakal bhaND bhAje
ஹிந்து தர்மம் வாழ்வதற்காகவும், பொய்மைகள் அனைத்தும் அழிவதற்காகவும்
உலகெங்கும் காலசா என்ற மார்க்கம் செழிக்கட்டும்
இவ்வாறு, 6ம் நூற்றாண்டு தொடங்கி 18ம் நூற்றாண்டு வரை பாரதத்தின் பல மொழிகளிலும், பல பகுதிகளிலும் ஹிந்து என்ற சொல் ஏற்கனவே ஒட்டுமொத்த ஹிந்து மதத்தையும், அதைப் பின்பற்றும்  சமுதாயத்தையும் குறித்திருக்கிறது.  அதன் தொடர்ச்சியாகவே பிரிட்டிஷாரும் இந்தச் சொல்லைப் பயன்படுத்த ஆரம்பித்தார்கள்.

     இந்திய அரசியலமைப்பு சாசனப்படி இந்தியத் துணைக்கண்டத்தின் மெய்யியல், சமயங்கள் மற்றும் பண்பாடு ஆகியவற்றைக் குறிக்கும் அடையாளச் சொல்லாகும். இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் படி "இந்து" என்பது இந்திய சமயங்களைக் குறிக்கிறது.

நாம்  ஹிந்துக்கள்.  ஹிந்து என்ற சொல்லைத் தப்பான அர்த்தத்தில் நான் பயன்படுத்தவில்லை. அல்லது அதற்கு ஏதாவது மோசமான பொருள் உண்டு என்று  நினைக்கிறவர்களின் கருத்தை நான் ஏற்கவுமில்லை. பழங்காலத்தில் அச்சொல் சிந்துவுக்கு மறுபுறம் வசிப்பவர்கள் என்று மட்டுமே பொருள்பட்டது.  இன்று நம்மை வெறுப்பவர்களில் பெரும்பாலானாவர்கள் அதற்குத் தவறான விளக்கம் தரலாம் என்றாலும் பெயரைப் பற்றி நாம் அதிகம் கவலைப் படவேண்டிய அவசியமில்லை.  ஹிந்து என்ற பெயர் உயர்ந்த லட்சியங்கள் அனைத்தையும், ஆத்மீகத் தொடர்புடைய அனைத்தையும் குறிக்கும் சொல்லாக விளங்குமா அல்லது நிந்தனைச் சொல்லாக, நசுக்குண்டவர்களை, உதவாக் கரைகளை, பாவிகளைக் குறிப்பதாக விளங்குமா என்பது நம்மைப் பொறுத்த விஷயமாகும்.  தற்பொழுது “ஹிந்து” என்ற சொல் இழிவான எதையாவது குறிப்பதாக விமர்சிக்கப் பட்டால், கவலைப் படவேண்டாம்.  எல்லா மொழிகளிலும் உள்ள எந்த ஒரு வார்த்தையைக் காட்டிலும் இதை உயர்ந்த பொருளுடையதாக ஆக்க நமது செயல் மூலம் முற்படுவோம்.


 சுவாமி விவேகானந்தர்,  1898ம் ஆண்டு லாகூரில் பேசியது.

Comments

Popular posts from this blog

புராண பேத தாத்பர்ய விளக்கம்

கிருஷ்ணலீலா ஆபாச தர்ப்பணம்

திருக்குறளின் வழியாக பகவத் கீதையின் ஞானம்